உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளியை அறக்கட்டளை தத்தெடுத்துள்ளதாக கூறி மிரட்டல் : சுப.தங்கவேலன் உதவியாளர் மீது புகார்

அரசு பள்ளியை அறக்கட்டளை தத்தெடுத்துள்ளதாக கூறி மிரட்டல் : சுப.தங்கவேலன் உதவியாளர் மீது புகார்

ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை அறக்கட்டளை தத்து எடுத்துள்ளதாக கூறி, அங்குள்ள ஆசிரியர்களை மிரட்டுவதாக, கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராம மக்கள் கலெக்டர் அருண்ராயிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எம்.நெடுங்குளத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் நேர்முக உதவியாளர் அசோக்கின் மைத்துனர் என கூறிக்கொண்டு, சென்னையை சேர்ந்த ஜீவானந்தம், எங்கள் ஊரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த ஆட்சியின்போது பட்டா போட்டு கையகப்படுத்தினார். இதில் 'மக்கள் அறக்கட்டளை' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி, ஊராட்சி பள்ளியை தான் தத்து எடுத்துள்ளதாகவும், ஆசிரியர்கள் தான் சொல்வதை கேட்க வேண்டும், எனக்கூறி மிரட்டுகிறார். கடந்த ஆட்சியில் இது குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, பலரது நிலங்களை மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். ஜீவானந்தம் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் கோடிக்கணக்கில் அரசு பணத்தை மோசடி செய்துள்ளனர். 'மக்கள் அறக்கட்டளை' என்ற பெயரில் டிராக்டர் வாங்கி, மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே, இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, நிலங்களை இழந்துள்ளவர்களுக்கு மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கலெக்டர் அருண்ராய் கூறியதாவது: கிராமத்தில் இரண்டு பிரிவுகளாக உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் நேற்று முன்தினமும் மற்றொரு பிரிவினர் நேற்றும் மனு கொடுத்துள்ளனர். இரண்டு மனுக்கள் மீதும் ஊராட்சிஉதவி இயக்குனர் மூலம் விசாரணை செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி