| ADDED : செப் 04, 2011 10:58 PM
கமுதி:கமுதியில் அரசியல் பொதுக்கூட்டங்களின் போது அலறவிடப்படும் ஒலி பெருக்கியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கமுதி, 300 கிராமங்களுக்கு மையமாக உள்ளது. மருத்துவம், வீட்டு உபயோக பொருள்கள், மளிகை சாமான்கள் உட்பட அனைத்து தேவைக்கும் கமுதியை தான் நாடவேண்டும். இங்குள் பஸ் ஸ்டாண்ட் அருகே பெருமாள் கோயிலை ஒட்டி நடுரோட்டில் தான் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துகின்றன. நடுரோட்டில் கூட்டம் நடத்தி மக்களை சிரமத்திற்குள்ளாக்குவதில் கட்சிகளிடையே எந்த பாகுபாடும் இருப்பதில்லை.வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாலை நடக்கும் கூட்டத்திற்காக காலையில் இருந்தே மைக் செட்டில் பாடல்கள் ஒலிபரப்பி மிகுந்த சப்தத்துடன் அலற விடப்படுகிறது. அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கும், அலுவலகங்களில் வேலை பார்ப்போருக்கும் இடையூறு ஏற்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. பல கிராம மக்களும் காய்கறி வாங்க கமுதியில் சங்கமிப்பர். அப்போது அதிக கூட்டம் காணப்படுவதால் அடிக்கடி திருட்டு நடக்கிறது. இதை கருதி கமுதி போலீசார் செவ்வாயன்று அரசியல் கூட்டத்திற்கு தடை விதித்திருந்தனர். ஆனால் தற்போது இதுபோன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, ஒலிபெருக்கி பிரச்னைக்கு முடிவு கட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.