| ADDED : மார் 14, 2024 10:47 PM
ராமநாதபுரம்,- பாம்பன் பகுதியில் மத்திய தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களின் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மீனவர்கள் தரப்பில் குளிர் பதனக் கிடங்கு அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் மீன் வளம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் மத்திய தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். பா.ஜ., மீனவர் பிரிவு மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட துணைத்தலைவர் முனீஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.பாம்பன் பகுதியில் உள்ள மீன் வளம் சார்ந்த தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர் கீதா லட்சுமி, ஜோஷ், நிர்வாக உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.மீன் உலர்த்துவதில் தொழில் நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை மதிப்பிடுவது மற்றும் நுகர்வோர் விருப்பத்தேர்வுகள், வர்த்தக சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் திணிக்கப்படும் சவால்களை எதிர்கொள்ள அவர்களின் தயார் நிலையை மதிப்பீடு செய்தனர்.உலர் மீன் உற்பத்தி முறைகள் சணல் போர்வைகளில் திறந்த வெளியில் உலர்த்தப்படுகின்றன. உப்பிடப்பட்ட உலர் மீன்கள் மூடிய கொட்டகைகளில் உலர்த்தப்படுகின்றன. கேரளாவில் ராமேஸ்வரம்பகுதி உலர்த்தப்பட்ட மீன்களுக்கு அதிக தேவை இருந்தாலும் புதிய மீன்களைப் போல காய்ந்த மீன்களுக்கும் விலை மாறும் தன்மையால் பாதிப்பு ஏற்படுகிறது.புதிய மீன்களை சேமிக்க குளிர் பதன கிடங்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.