ஆத்துார், ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 9 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே, சேலம் -- விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. அதில் காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது. அந்த கேட்டை அகற்றிவிட்டு, 9.96 கோடி ரூபாயில், சுரங்கப்பாலம் அமைக்க, ரயில்வே துறை மூலம் கட்டுமானப்பணி நடக்கிறது. அப்பணியை நிறுத்தக்கோரி, கடந்த பிப்., 5ல், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, புனல்வாசல், ஒதியத்துார், வளையமாதேவி, சார்வாய்புதுார், சார்வாய் உள்பட, 9 கிராம மக்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு சுரங்கப்பாலம் அமைப்பதற்கு அப்பகுதியில் பள்ளம் தோண்டினர். இதையறிந்த காட்டுக்கோட்டை உள்பட, 9 கிராம மக்கள், காலை, 10:00 மணிக்கு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர்.அப்போது பாலப்பணி மேற்கொண்டவர்களிடம், 'இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம், மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். அவரது உத்தரவுக்கு பின், பாலப்பணியை தொடங்குங்கள். தற்போது வேண்டாம்' என, போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால் பணியை நிறுத்திவிட்டனர். பின் மறியலை மக்களும் கைவிட்டனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'சுரங்கப்பாலம் அமைத்தால் மரவள்ளி, கரும்பு போன்ற விளைபொருட்களை லாரியில் எடுத்துச்செல்ல முடியாது. கேட் விரிவாக்கம் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும்' என்றனர்.