| ADDED : நவ 23, 2025 01:11 AM
சேலம். சேலம் ராமானுஜர் மணிமண்டபத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், 8ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று கருடசேவையுடன் நிறைவடைகிறது.சேலம் எருமாபாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டப வளாகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி, காஞ்சிபுரம் வரதராஜர் மற்றும் மேல்கோட்டை சம்பத்குமாரன் ஆகிய நான்கு திவ்யதேச பெருமாள்களும் நான்கு திசைகளில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.இந்த பெருமாள்களுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருப்பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. 8ம் ஆண்டு பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. நேற்று யாகத்தில் வைத்து பூஜித்த பல வண்ண பவித்ர மாலைகளை ஸ்ரீ ராமானுஜர், நான்கு திவ்யதேச பெருமாள்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சார்த்தி சிறப்பு யாகவேள்ளி மற்றும் பிரபந்த பாராயணம் செய்யப்பட்டது.நிறைவு நாளான இன்று காலை, 6:00 மணிக்கு பிரதான யாகங்கள் நடத்தப்படும். காலை 7:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மணிமண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு கருடசேவை சாதிப்பார். தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.காலை, 8:00 மணிக்கு அனைத்து யாகங்களும் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும். 9:00 மணிக்கு சாற்றுமுறை, பக்தர்களின் பஜனை, நாம சங்கீர்த்தனங்களுடன் திருப்பவித்ர உற்சவம் நிறைவடையும். ஏற்பாடுகள் ஸ்ரீ பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.