ஓமலுார்:தீவட்டிப்பட்டி
கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய இரு தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியபோதும்
அப்பகுதி போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.காடையாம்பட்டி தாலுகா
தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர்
வழிபடுவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதில் கடந்த, 2ல்,
தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டு
கல்வீச்சு சம்பவம் நடந்தது. 5க்கும் மேற்பட்ட கடைகள் சேதமாகின.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பழம், நகை கடைகள் தீப்பிடித்து
எரிந்தன. கலவரத்தை தடுக்க முயன்ற சில போலீசார் மீதும் கற்கள் பட்டு
காயம் அடைந்தனர். சேலம் எஸ்.பி., அருகண்கபிலன் தலைமையில் போலீசார், தடியடி நடத்தி கலவரக்காரர்களை ஒடுக்கினர்.இந்த
வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் வரை, 27 பேரை போலீசார் கைது
செய்திருந்தனர். நேற்று நாச்சனம்பட்டியை சேர்ந்த யுவராஜ், 24,
என்பவரை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் மாரியம்மன்
கோவில், அதன் தேர், தீவட்டிப்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு
நாட்கள் அடைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும், நேற்று திறக்கப்பட்டு
வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை
காணப்பட்டது.இதுகுறித்து, ஏ.டி.எஸ்.பி., கண்ணன் கூறுகையில்,
''கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய, இரு
தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேமரா, சமூக வலைதளத்தில் பரவிய
வீடியோக்களால், விரைவில் பலர் கைது செய்யப்பட உள்ளனர்.
தீவட்டிப்பட்டி முழுதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது,'' என்றார்.