வாழப்பாடி:முதியவரை
கடத்தி தாக்கியதோடு, அவரது சொத்தை அபகரிக்க முயன்றதாக,
அ.தி.மு.க.,வை சேர்ந்த இரு கிளை செயலர்கள், பா.ம.க., நிர்வாகி என, 3 பேரை
போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெருமாள்
தெருவை சேர்ந்தவர் பாலமுரளி வீரனகுப்தா, 54. இவரது தந்தை
கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக, வாழப்பாடியில் கடை உள்ளது.
அந்த கடையை, பெருமாள் தெருவை சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலர் சேகர், 65,
என்பவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு விட்டார். 2
மாதங்களுக்கு முன், கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார். இதையடுத்து
சேகர், வாடகை தராமல் பாலமுரளி வீரனகுப்தாவை மிரட்டியுள்ளார். இதனால்
அவர், அந்த கடை, மற்றொரு விவசாய நிலம் உள்ளிட்டவற்றை
விற்றுவிட்டார்.அவர், நேற்று காலை, 6:00 மணிக்கு சந்தைப்பேட்டை
அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யாகவுண்டர் தெருவை
சேர்ந்த சிக்கன் கடை நடத்தும் சங்கர், 43, அ.தி.மு.க., கிளை செயலர் குமரன்,
52, வாழப்பாடி, காளியம்மன் நகரை சேர்ந்த, பா.ம.க., நிர்வாகி
ஜெயக்குமார், 48, சேகர் ஆகியோர் காரில் வந்து, பாலமுரளி
வீரனகுப்தாவை கடத்திச்சென்றனர். தொடர்ந்து அவரை தாக்கினர்.
பின் கொலை மிரட்டல் விடுத்து, காலி பாண்டு பேப்பரில் கையெழுத்து
வாங்கினர். இதையடுத்து சந்தைப்பேட்டை அருகே, அவரை காரில் இருந்து
இறக்கிவிட்டு சென்றனர்.படுகாயமடைந்த அவர், வாழப்பாடியில் உள்ள
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி,
வாழப்பாடி போலீசார் விசாரித்து, கொலை முயற்சி, நில அபகரிப்பு உள்பட, 5
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சேகர், குமரன், ஜெயக்குமார்
ஆகியோரை கைது செய்தனர். சங்கரை தேடுகின்றனர். அவர் மீது ஏற்கனவே
மது விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.