| ADDED : ஆக 04, 2024 01:16 AM
வீரபாண்டி, மண் வளம் காப்பதோடு கூடுதல் மகசூல் பெற வயல்களில் சுழற்சி முறையில் மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:வயல்களின் மண் வளம் காக்க, அதிக மகசூல் பெற, சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்வது அவசியம். பயிர்களின் வளர்ச்சிக்கு பேரூட்டம், நுண்ணுாட்டம் என இரு வகை சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஒரே பயிரை திரும்ப திரும்ப சாகுபடி செய்தாலும் மண் வளம் பாதித்து இயற்கை நடைமுறை சிதைகிறது.நிலக்கடலை பயிருக்கு அதிக அளவு நைட்ரஜன் தேவை. இதனால் முதல் முறை வயலில் சாகுபடி செய்யும்போதே மண்ணில் உள்ள நைட்ரஜன் முழுதையும் பயிர் உறிந்து விடும்.மீண்டும் அதே வயலில் நிலக்கடலை பயிரிட்டால் நைட்ரஜன் தேவையான அளவு இன்றி வளர்ச்சி குறைவதோடு மகசூல் இழப்பு ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். காற்றில் உள்ள நைட்ரஜனை நிலத்தில் தேக்கி வைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் வாழும் வேர்களை கொண்ட உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றை பயிரிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிர் சாகுபடி செய்து அறுவடை முடிந்த பின் உடனே பயிர் சாகுபடி செய்யாமல், 3 மாதங்களுக்கு அப்படியே விட்டு அதில் வளர்ந்துள்ள செடிகளை மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தி பின் சாகுபடி செய்ய வேண்டும்.இதனால் கூடுதல் மகசூல் பெற முடியும். விவசாயிகள் கடைப்பிடித்து பயன் பெறலாம்.