சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் வசூல் செய்து சாதனை புரிந்த முகவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில், 2022 - 23ல் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில், 1,779.24 கோடி ரூபாய், 2023 -24ல், 2,287 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சல் முகவர்களின் சேவை இன்றியமையாதது. தற்போது, 2022 - 23ல் சாதனை படைத்த அஞ்சல் முகவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.முகவர் சாதனை
குறிப்பாக முகவர் வேலுமணி, 71.39 கோடி ரூபாய் வசூலித்து, தொடர்ந்து, 4 ஆண்டாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாவட்ட, மாநகராட்சி மண்டலம், நகராட்சி, ஒன்றிய அளவில் சிறுசேமிப்பு திட்டங்களில் அதிகளவில் வசூலித்து சாதனை புரிந்த அனைத்து சிறுசேமிப்பு முகவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.அஞ்சலக சிறுசேமிப்பின் அவசியம், பயன்களை முகவர்கள் எடுத்து சொல்லி மக்களிடம் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, உழைத்து சேமித்த பணத்தை சிட்பண்ட், தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.