சேலம்: குகை, மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா, அடுத்த வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா, வெகு பிரசித்தி பெற்றது. குறிப்பாக, இங்கு நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண, பல்வேறு ஊர்களிலிருந்து பக்-தர்கள் திரண்டு வருவது வழக்கம். நடப்பாண்டு ஆடித்திருவிழா, அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் ஆக., 7ல் தீ மிதிவிழா, 8ல் வண்டி வேடிக்கை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இந்நிலையில், வண்டி வேடிக்கை நடைபெறும், குகை திருச்சி பிரதான சாலையில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன.இதனால், சாலைகளில் பள்ளம் தோண்டி, முறையாக மூடாத-தாலும், இன்னும் தார்சாலை அமைக்காததாலும், சாலையை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், வண்டி வேடிக்கை காண, இந்த சாலையில், ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் சூழல் உள்ளதால், சாலைகளில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, பள்ளங்களை மூடி, சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.