| ADDED : ஜன 31, 2024 03:36 PM
சேலம் : கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த சலுான் கடை தொழிலாளியை, மர்ம கும்பல் கழுத்தறுத்து கொலை செய்தது.சேலம், பெரிய கொல்லப்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி, 38. இவரது அண்ணன் கண்ணன். இவரது சலுான் கடையில் கருணாநிதி பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி, 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ராஜேஸ்வரி, 19, அன்னதானப்பட்டியை சேர்ந்த மோகன்லாலை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கடந்த செப்., 18ல், கண்ணன் வீட்டுக்கு ராஜேஸ்வரி, கணவருடன் வந்தார். இதை அறிந்து அங்கு வந்த கருணாநிதி, அவரது அண்ணியான, பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சாந்தியிடம், 'காதல் திருமணத்துக்கு உதவியது ஏன்' என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரடைந்த கருணாநிதி, கத்தியால் சாந்தியை கழுத்தறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார், கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் அவர் ஜாமினில் வெளிவந்தார்.நேற்று மாலை, 6:00 மணிக்கு சேலம் கோரிமேடு, தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள காலியிடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தார். அங்கு வந்த, 3 பேர், அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். சடலத்தை மீட்டு கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். மோப்பநாய் மூலமும் சோதனை நடந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.