இடைப்பாடி தீப்பாஞ்சாலி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.சூரியகிரி மலையின் வடபுறமாக உள்ள திருக்கோபாலபுரம் எனும், இடசை நகரில் சரபங்கா நதியின் கிழக்கு கரையில் உள்ள வெள்ளாண்டிவலசில், கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் அன்னை தீப்பாஞ்சாலி அம்மன். க்ஷத்திரிய வம்சம் சம்பு மகரிஷி கோத்திரம், ஸ்ரீவன்னியர்குல ஷத்திரியர் ஆகிய முன்னோர்கள், கொழந்தா கவுண்டர் மற்றும் மலையன் பூசாரி சகோதரர்கள், இப்பகுதிக்கு வாழ்வாதாரம் தேடி வந்தனர்.சகோதரர்களில் ஒருவரது மகளுக்கு, அவருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்ய பெற்றோர் வலியுறுத்தினர். அதற்கு மனமின்றி, திருமணத்தன்று விடிகாலை, சுட்ட செங்கற்களால் ஆன அக்னி குண்டம் வளர்த்து தீயில் இறங்கி அப்பெண் இறந்து விடுகிறார். அப்போது ஜோதி வடிவமாக தோன்றி, பெற்றோரை பார்த்து, 'வருந்த வேண்டாம். குடும்ப பெருமையை காக்க, இங்கேயே தீப்பாஞ்சாலி அம்மனாக, சப்த கன்னிமார்களுடன் வீற்றிருப்பேன். நம் குலம் தழைக்க குல தெய்வமாக இருப்பேன்' என, தீப்பாஞ்சலி அம்மன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.காலை ௯.௦௦ மணிமேலும் இந்த அம்மன், செல்வ விநாயகர், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு கோவில் கட்ட, 2025 மார்ச்சில் கால்கோள் நடப்பட்டு, கோபுரம், கட்டட பணி முடிந்துள்ளது. தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கு, கடந்த, 23ல் யாகசாலைக்கு கால்கோள் நடப்பட்டது. கோபுர கலசங்கள் மீது தெளிக்க, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. இப்புனித நீர், விநாயகர், தீப்பாஞ்சாலி அம்மன், சப்த கன்னிமார் கோபுரங்கள் மீது ஊற்றப்பட்டு, இன்று காலை, 9:00 முதல், 9:35 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்கின்றனர்.சிறப்பு பூஜைவெள்ளாண்டிவலசு, வண்ணாம்பாறைக்காடு, செல்லாங்காடு, முனியப்பன் கோவில் காடு, நண்டுகாரன்காடு, சேலம், நல்லுார், ஆகிய ஊர்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பங்காளிகள் குடும்பத்தினர், தீப்பாஞ்சாலியம்மன் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வந்து, சிறப்பு பூஜையில் பங்கேற்பர். அதேபோல் தைப்பொங்கல் முடிந்து அடுத்த, 2 நாள் கழித்து கரிநாளன்று, இரவில் சிறப்பு பூஜை செய்து, 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை வெட்டி, கோவில் வளாகத்திலேயே சமைத்து, இரவிலேயே சாப்பிடுவர். மறுநாள் பங்காளிகள் வீடு திரும்புவர். ஆண்டுதோறும் இந்த ஆட்டுக்கிடா வெட்டும் பூஜையில், அனைத்து குடும்ப பங்காளிகளும் பங்கேற்று வருகின்றனர்.