சேலம்: ஓமலூரில் அண்ணமார் திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. சேலம் மாவட்டம் ஓமலூரில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அண்ணமார் என்ற பெயரில், புதிதாக திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 1,500 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்கவும், 1,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வேலுமணி, மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன், பொருளாளர் சண்முகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் அழகிரி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வேலு உள்பட பலர் பேசினர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான தனியரசு ரிப்பன் வெட்டி திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பின், அவர் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொங்கு வேளாளர் சமுதாய மக்கள் மீதும், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் என் மீதும், 37 வழக்குகளை போட்டு பழி வாங்கினர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கொங்கு இளைஞர் பேரவை சார்பில், எம்.எல்.ஏ.,வாக எனக்கு போட்டியிட வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்தார். இதனால், கொங்கு சமுதாய மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அண்ணமார் திருமண மண்டப உரிமையாளர்கள் குமரேசன், கலா ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் நடராஜ், குமார், ஒன்றிய தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ரயில்வே ஒப்பந்ததாரர் தங்கமணி நன்றி கூறினார்.