மேட்டூர், மேட்டூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த, 11ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தை, முதல்வர் ஸ்டாலின், தர்மபுரியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று மாலை, பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், அக்கட்சியின் நகர நிர்வாகிகள், மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்றனர்.அப்போது புறநோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் இருந்த நிலையில், ஊழியர்கள் இல்லாததால் ஒருங்கிணைந்த ஆய்வகம் மூடப்பட்டிருந்தது. ஏமாற்றம் அடைந்த எம்.எல்.ஏ., மருத்துவமனை நுழைவாயில் முன் மாலை, 6:45 மணிக்கு, பா.ம.க., நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மருத்துவ அலுவலர் இளவரசி, மேட்டூர் போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை. இரவு, 7:30 மணிக்கு சேலம் இணை இயக்குனர் பழனிசாமி(ஊரக நல பணி) வந்ததும், போராட்டத்தை எம்.எல்.ஏ., கைவிட்டார். பின், 'மாலை நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் கூறியதால், எம்.எல்.ஏ., புறப்பட்டார்.