உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலெக்டர், கமிஷனரால் தி.மு.க., வெற்றி கேள்விக்குறி: சேலம் தி.மு.க.,அவைத்தலைவர் ஆடியோ வைரல்

கலெக்டர், கமிஷனரால் தி.மு.க., வெற்றி கேள்விக்குறி: சேலம் தி.மு.க.,அவைத்தலைவர் ஆடியோ வைரல்

சேலம்: கலெக்டர், மாநகராட்சி கமிஷனரால், சேலம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வெற்றி கேள்விக்குறி' என, அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் பேசிய ஆடியோ பரவி வருகிறது.தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் பேசிய ஆடியோ பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, அக்கறை எடுத்து செயல்படுகிறார். ஆனால், சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகார வன்முறையை, என் வாழ்நாளில் கண்டதில்லை. மனிதர்களை மதிக்காத தற்போதைய கலெக்டர் போன்று, வேறு கலெக்டரையும் பார்த்ததில்லை. அவருக்கு இணையாக உள்ள மாநகராட்சி கமிஷனர், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு, தெற்கு சட்டசபை தொகுதியில் பொறுப்பாளராக உள்ளார்.இவர்கள் இருவரும், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சிடம், 'நீங்கள் சேலம் லோக்சபா தேர்தலில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வோம்' என, வாக்குறுதி அளித்துள்ளனர். கட்சி தொண்டர்கள் போல் தெரிவித்திருப்பது என் கவனத்துக்கு வந்துள்ளது. இது உண்மையாக அல்லது பொய்யாக இருக்கலாம்.இருவருக்கும் அரசியல் உணர்வு இருப்பதில் தவறில்லை. ஆனால், இருக்கும் பொறுப்பில் என்ன காரியத்தை சட்டப்படி செய்ய வேண்டுமோ அதற்கானவர்களாக இல்லை. இவர்களை வைத்து, லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது கடினமானது. இதுகுறித்து அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடமும் தெரிவித்துவிட்டேன். எம்.எல்.ஏ., 'நான் என்ன செய்ய முடியும்' என பரிதாபமாக கேட்கிறார்.சேலம் தொகுதியில், எந்த கட்சி வேண்டும் என்றாலும் வெற்றி பெறலாம். ஆனால் அதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு எதிராக, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும். அமைச்சர், எம்.எல்.ஏ.,விடம் பலமுறை தெரிவித்தும் தீர்க்க முடியாத இப்பிரச்னையை, முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஆடியோ மூலம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் பேசியுள்ளார்.இதுகுறித்து சுபாஷ் கூறுகையில், ''கலெக்டர், கமிஷனர் குறித்து வந்த தகவலை கட்சிக்காரர்களுடன் வாட்ஸாப்பில் பகிர்ந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் மீது விரோதம் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை