| ADDED : ஜன 12, 2024 12:16 PM
வாழப்பாடி: வாழப்பாடியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுார், மத்துார், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மார்கழியில் பயிர்களை அறுவடை செய்த பின், தையில் புது சாகுபடி செய்யும் முன், நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால் காணும் பொங்கலன்று வங்கா நரியை பிடித்து கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று கோவில் வளாகத்தில் ஓட விடுவர். ஆனால் வங்காநரி பாதுகாக்க வேண்டிய பட்டியலில் உள்ளதால் அதை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் வரும் காணும் பொங்கலன்று திருவிழா நடத்த, வங்காநரியை பயன்படுத்த வேண்டாம்; மீறி பிடித்து துன்புறுத்துவோர் மீது, 3 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, உதவி வன பாதுகாவலர்கள் செல்வகுமார், மாதவி உள்ளிட்டோர், நேற்று முன்தினம் சின்னமநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து நேற்று கொட்டவாடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.