| ADDED : பிப் 15, 2024 10:33 AM
இடைப்பாடி,: மாற்றுத்திறனாளி பெண்ணை கொன்ற பள்ளி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.இடைப்பாடி அருகே குருக்கப்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி, 50. இவரது கணவர் மாணிக்கம், 10 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பெருமாயி, தனியே வசித்தார். கடந்த, 12ல் தலையில் கல்லை போட்டு பெருமாயி கொலை செய்யப்பட்டார். பூலாம்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவரை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த, 11 இரவு, 11:30 மணிக்கு, பெருமாயி வீட்டில் இருந்தபோது, அவரிடம் தண்ணீர் வாங்கி, பிளஸ் 2 மாணவர் குடித்துள்ளார். பின் பெருமாயியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார். பெருமாயி மறுத்து, இதுகுறித்து எல்லோரிடமும் சொல்கிறேன் என கூறியுள்ளார். இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர், கையால் பெருமாயி முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் இது வெளியே தெரிந்தால் அவமானம் என எண்ணிய மாணவர், கல்லை துாக்கி தலையில் போட்டு பெருமாயியை கொன்றுள்ளார். மாணவர், ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 2 படித்த நிலையில், ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். விசாரணையில் கொலை செய்ததை மாணவர் ஒப்புக்கொண்டதால் கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.