| ADDED : மார் 17, 2024 02:16 PM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு அறிக்கை:மண்ணில் சாம்பல் சத்து அதிகம் உள்ளது. அதில், 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது. மண்ணில் கரையாத நிலையில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து, பயிர்களுக்கு பொட்டாஷ் பாக்டீரியா அளிக்கவல்லது. இந்த பொட்டாஷ் பாக்டீரியா, மண்ணில் கட்டுண்டு கிடைக்கும் சாம்பல் சத்தை விடுவித்து நீரில் கரையும் சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கிறது.பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதோடு பயிர்களின் மகசூலை, 15ல் இருந்து, 20 சதவீதமாக அதிகரிக்கிறது. மாசற்ற சுற்றுப்புறச்சூழலை உருவாக்கும்.இந்த நுண்ணுயிர் மண்ணில் அதிகளவு உப்பு அல்லது உலர் தன்மை இருந்தாலும் அதை தாங்கி வளரக்கூடிய தன்மை உடையது. மண்வளம் பேணி, குறைந்த செலவில் அதிக வருவாய் அளிக்கிறது. இந்த திரவ உயிர் உரத்தை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்ய, ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 50 மில்லி கலந்து பயன்படுத்தலாம்.ஒரு ஏக்கருக்கு, 200 மில்லி திரவ உயிர் உரத்தை தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் வயல்களில் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 150 மில்லி திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீர் கலந்து நாற்றுகளின் வேர் நனையும்படி, 30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி திரவ உயிர் உரம் என்ற அளவில் விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து, 15, 30, 45 நாட்களில் தெளிக்கலாம். விபரங்களுக்கு, 98425 43215 என்ற எண்ணில் உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.