சேலம், ''அம்பேத்கருக்கு அவமானம் செய்த காங்., உடன், வி.சி.க., கூட்டணி வைத்துள்ளது. அம்பேத்கர் மேல் விசுவாசம் இருப்பின், அவர்கள் அக்கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும்,'' என, பா.ஜ., பட்டியல் அணி மாநில பார்வையாளர் வெங்கடேஷ் மவுரியா தெரிவித்தார்.சேலம் பா.ஜ., பெருங்கோட்ட பட்டியல் அணி சார்பில், மாநில, மாவட்ட, மண்டல தலைவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று மாதவம் அரங்கில் நடந்தது. இதில், பட்டியல் அணி மாநில செயலர் சாட்சாதிபதி, மாநில தலைவர் சம்பத்ராஜ், மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பட்டியல் அணி மாநில பார்வையாளர் வெங்கடேஷ் மவுரியா, நிருபர்களிடம் கூறியதாவது:பீகாரில் இந்தியா கூட்டணி வீட்டுக்கு போய்விட்டது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட, 30 கோடி ரூபாயை, வேறு வேறு தலைப்புகளில் பயன்படுத்தி, அவர்களுக்கு அநியாயம் செய்துள்ளார். இவை அந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. பட்டியலின மக்களின் ஓட்டுக்கள், தி.மு.க..வுக்கு கிடைக்காது.பட்டியலின மக்களுக்கு கடவுளாக விளங்கும் அம்பேத்கருக்கு, காங்., ஆட்சியில் இருக்கும் வரை, பாரத ரத்னா விருது கூட வழங்கப்படவில்லை. பா.ஜ., தான் அம்பேத்கருக்கு பல கவுரவங்களை வழங்கியது.அம்பேத்கருக்கு அவமானம் செய்த காங்., உடன், வி.சி.க., கூட்டணி வைத்துள்ளது. அம்பேத்கர் மேல் விசுவாசம் இருப்பின், அவர்கள் அக்கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும். அவர் அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும்தான் அக்கூட்டணியில் தொடர்கிறார். தமிழகத்தில் உள்ள, 44 தனித்தொகுதிகளில், 40 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற போகிறது. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வீட்டுக்கு போவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.