| ADDED : ஜூன் 27, 2024 05:04 AM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி பகுதியில் உழவு பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்தாமல் காளைகளை மீண்டும் விவசாயிகள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தில் காளைகளின் பங்களிப்பு அதிகம், வயல்களுக்கு விதை நெல், உரம், விவசாய கருவிகள் கொண்டு செல்ல, ஆட்களை ஏற்றி செல்ல, அறுவடை செய்த வயல்களில் இருந்து நெல் மூடைகளை ஏற்றி வர மாட்டு வண்டிகளும் அதனை இழுக்க காளை மாடுகளும் இருக்கும்.டிராக்டர், பவர் டில்லர் வந்த பின் உழவு மாடுகள்பயன்பாடு குறைந்து விட்டது. பெரும்பாலான கிராமங்களில் உழவு மாடுகள் வளர்ப்பே இல்லை, மாட்டுவண்டிகளும் காலப்போக்கில் மறைந்து விட்டதால் உழவு மாடுகள் வளர்ப்பும் மறைந்து விட்டது. திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள்ஏராளமான உள்ளன. தென்னை மரங்களுக்கு இடையே வாழை, கீரை வகைகளை பயிரிடுவது வழக்கம், அதற்கு உழவு பணிகளுக்கு டிராக்டர்களை பயன்படுத்த முடியாததால் உழவு மாடுகளை பயன்படுத்தி வருகின்றனர். திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு, தாழிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உழவு மாடுகள் உள்ளன. தற்போது அவற்றை பயன்படுத்தி உழவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். உழவு மாடு வைத்துள்ள விவசாயிகள் கூறுகையில், உழவு மாடுகளை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளும் போது மாடுகளின் சாணமும் உரமாக மாறி விடும், இயற்கை உரமாக இருப்பதால் விளைச்சல் நன்றாக இருக்கும், ஒரு ஏக்கர் உழவு செய்ய ஆயிரத்து 400 ரூபாய் வாங்குகின்றோம், மூன்று மணி நேரத்தில் ஒரு ஜோடி மாடுகளை வைத்து உழவு செய்யலாம், இதே உழவு டிராக்டர் என்றார் மூவாயிரம் ரூபாய் வரை செலவாகும், டிராக்டர் உழவு ஆழமாக இருக்காது. ஆனால் மாடுகளை பயன்படுத்தும் போது நன்கு ஆழமாக உழவு செய்யலாம், என்றனர். கோடை விவசாயத்திற்கும், தென்னை மரங்களுக்கு ஊடுபயிர் பயிரிடவும் காளை மாடுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளதால் திருப்பாச்சேத்தி பகுதிகளில் உழவு மாடு வைத்துஉள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.