UPDATED : மார் 28, 2024 07:11 AM | ADDED : மார் 28, 2024 05:42 AM
தேவகோட்டை: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊரணி பராமரிப்பில்லாமல் உள்ளது. சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவகோட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில் உள்ளது. சிலம்பணி ஊரணி துாவாரப்படாமலும், கோரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இங்கு மீன் வளர்ப்பதற்கு ஏலம் விடப்படுகிறது. அதே சமயம் கலங்காது கண்ட விநாயகர் கோயில் பின்புறம் வெள்ளையன் ஊரணி உள்ளது. ஊரணியின் ஒரு புறம் பெரிய விநாயகர் கோயிலும், மற்றொரு புறம் ரங்கநாத பெருமாள் கோயிலும் , கோதண்டராமர் கோயிலும் உள்ளது. மூன்று கோயில்களுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஊரணியே தெரியாத நிலையில் கடைகள், வீடுகள் உள்ளன. ஊரணியில் உள்ள குப்பையால் துர்நாற்றம் வீசி பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் உள்ளது. ஒரு காலத்தில் குடிநீர் ஊரணியாக இருந்தது. ஊரணியில் உள்ள எட்டு படித்துறைகளில் இரண்டு படித்துறை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. அந்த படித்துறையும் கூட கால்வைக்க முடியாமல் உள்ளது. திறந்த வெளி கழிப்பிடமாக இருக்கிறது. ஊரணி கரை சுவற்றில் இருந்தே கடைகள், குடியிருப்பு, படிகளில் கூட ஆக்கிரமிப்பு நிரம்பி விட்டது. இந்த ஊரணிக்கு வரும் மடை அடைப்பட்டுள்ளது.கரைகளில் உள்ள கட்டடங்களில் இருந்து வரும் கழிவு இங்கு சேர்கிறது. பலர் குரல் கொடுத்தும் அறநிலையத்துறையும், சுகாதார துறையும் கண்டு கொள்ளவில்லை. தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கலங்காது கண்ட விநாயகர் கோயிலில் திருப்பணிகளை செய்து வருகிறது. அப்போது கூட இந்த ஊரணியை சுத்தம் செய்து குப்பையை அகற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் ஊரணியை கவனத்தில் கொள்ளவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களின் குமுறலை தொடர்ந்து இந்து முன்னணியினர் படிகளை சுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர். இந்து முன்னணி தலைவர் சுரேஷ் கூறுகையில், மூன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்படும் என அச்சப்படுகின்றனர். ஊரணியை சுத்தம் செய்தும் , ஆக்கிரமிப்பு களை அகற்றும்படி அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. கும்பாபிஷேக பணி நடக்கும் போது ஊரணியை மீட்டு சுத்தம் செய்வார்கள் என எதிர்பார்த்து கேட்ட நிலையில் அந்த திட்டமே இல்லை என்கின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி முதல் கட்டமாக ஊரணி படிகளை மீட்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளோம் என்றனர்.