| ADDED : ஆக 12, 2024 03:27 AM
திருப்புவனம் : திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய பம்ப்செட்களில் இருந்து மர்மநபர்கள் மோட்டார்களை திருடிச் செல்வதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்புவனம் வட்டாரத்தில் ஒரு பகுதி வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பி செயல்பட்டாலும் செங்குளம், பறையன்குளம், முக்குடி, காஞ்சிரங்குளம், கரிசல் குளம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை வைத்தும் விவசாயம் நடைபெறுகிறது. நெல், வாழை, வெங்காயம், கத்தரி, வெண்டை உள்ளிட்டவைகள் இப்பகுதியில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூச்செடிகளும் இப்பகுதியில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மதுரை நகரின் வெகு அருகில் இக்கிராமங்கள் இருப்பதால் கோடை காலங்களில் மலர் சாகுபடி பெருமளவு செய்யப்படுகிறது. மதுரை பூ மார்கெட்டிற்கு தினசரி அதிகாலை நான்கு மணிக்கு மல்லிகை பூ பறிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.பூ விவசாயிகளுக்காக இப்பகுதியை மதுரை நகருடன் இணைக்கும் வகையில் அதிகாலையில் டவுன் பஸ்சும் இயக்கப்படுகிறது. விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச பம்ப்செட்களுடன் கூடிய கிணறு வசதி உள்ளது. இதில் மாலை நேரங்களில் ஒரு கும்பல் மோட்டார்கள், மின் கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவற்றை திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மோட்டார்கள், மின்கம்பிகளை கும்பல்கள் திருடிச் செல்வதால் இழப்பு ஏற்படுவதுடன் மீண்டும் மின் இணைப்பை சரி செய்ய மின்வாரியத்தினருடன் போராட வேண்டியுள்ளது. திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்தால் மட்டுமே மின் கம்பியை பொருத்துகின்றனர். இல்லாவிட்டால் விவசாயிகள் தினமும் அலையவேண்டியுள்ளது. மதுரைக்கு வெகு அருகில் உள்ள காஞ்சிரங்குளத்தில் இருந்து இரண்டு பஸ் மாறி திருப்புவனம் வந்து புகார் செய்ய வேண்டும். அலைச்சலுக்கு பயந்து கொண்டு பலரும் போலீசில் புகார் செய்ய முன்வருவதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ச்சியாக மர்ம கும்பல்கள் மோட்டார்களை திருடி வருகின்றனர்.புதிய மோட்டார் வாங்க போதிய நிதி இல்லாத நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகுவதை விவசாயிகள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர். மோட்டார்களை திருடுவதுடன் மின் இணைப்பு உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்துவதால் மீண்டும் மீண்டும் செலவீனம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எல்லையோர கிராமங்களில் மின் மோட்டார் திருட்டு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடக்க வேண்டும்.