| ADDED : ஜூன் 16, 2024 10:20 PM
சிவகங்கை : கோடை மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர் பயிரிட்டு பயிருக்கு இயற்கை உரம் பெற்று, மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கோடையில் பெறும் மழையை வைத்து பசுந்தாள் உரப்பயிர் பயிரிடுவதன் மூலம் பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன் மண்வளத்தையும் பாதுகாக்க இயலும்.பயிர் அறுவடை செய்தபின் தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ அளவில் விதைத்து, பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டு அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் பொழுது மடக்கி உழ வேண்டும். இது மண்வளத்தை மேம்படுத்தும். பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்ட சத்து அளித்து சாகுபடிக்கு நன்மை தரும்.மண்ணில் உள்ள அங்கக பொருட்களின் அளவே மண்வளத்தை நிர்ணயிக்கிறது. பசுந்தாள் உரப்பயிரை உழும் போது நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு மக்கு பொருள், அங்கக பொருளை தருகின்றன.மண்ணுக்கு உயிரோட்டம் தந்து நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரித்து, வறட்சியில் இருந்து பயிரை பாதுகாக்கும். காற்றில் உள்ள தழைசத்தை வேர் மற்றும் தண்டு முடிச்சுகளில் சேமிக்கும்.இதை உழுவதின் மூலம் ஒரு ஏக்கர் மண்ணுக்கு 30 முதல் 75 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றன.நுாண்ணுாட்ட சத்துக்கள் வெளியாகி பயிர்கள் நன்கு செழித்து வளர உதவும். பயிருக்கான ஊட்டச்சத்துஅளவும் அதிகரிக்கும்.இப்பயிர் பயிரிடுவதின் மூலம் மண்ணின் மேற்பரப்பை காற்று மற்றும் நீர் அரிமானத்தில் இருந்து பாதுகாக்கும். மண்ணில் இருந்து சத்துக்கள் அடித்து செல்வதை தடுத்து, மண் கட்டமைப்பை மேம்படுத்தும்.இவை மண்ணில் மக்கும் போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு களர் மண்ணில் உள்ள கால்சியம் கார்பனேட்டில் இருந்து கால்சியத்தை கரைத்து வெளியேற்றுவதின் மூலம், மண்ணின் அமில கார நிலையை குறைத்து களர் மண்ணை பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாக மாற்றும். விவசாயிகள் பல நன்மை தரும் பசுந்தாள் உரப்பயிரை பயிரிட்டுபயன்பெறலாம், என்றார்.