| ADDED : மே 16, 2024 06:19 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டம்பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற சுகாதார நிலையம். இங்கு பொது மருத்துவம், மகப்பேறு, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. தினசரி 100க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் விபத்து உள்ளிட்ட தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில் இது நாள் வரை மகப்பேறு பிரிவில் சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கப்பட்டது. சிசேரியன் செய்யக்கூடிய பெண்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க முடியாத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பதற்கான வசதியை இந்த மருத்துவமனையில் மாவட்ட பொது சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் திருவேம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எஸ்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் தெரிவித்தார்.