| ADDED : ஜன 02, 2026 05:32 AM
காரைக்குடி : சாக்கோட்டை பகுதியில், கத்தரி செடியில் நோய் தாக்குதலால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாக்கோட்டை வட்டாரத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை, மித்திரங்குடி, சிறுகப்பட்டி, வீரசேகரபுரம், பனங்குடி, அரியக்குடி இலுப்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தோட்டப் பயிர்கள் 50 ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கத்தரி, வெண்டை, புடலை, சோளம், பாகற்காய், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் காரைக்குடி புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதிகளுக்கு செல்கிறது. காரைக்குடி புதுவயல் பள்ளத்துார் கண்டனுார் சந்தைகளில் அதிக அளவில் விவசாயிகள் தோட்ட பயிர்களை விற்பனை செய்து வருகின்றனர். சாக்கோட்டை வட்டாரத்தில் விளையும் பச்சை கத்தரிக்காய், வெண்டைக்கு தனி மவுசு உண்டு. தற்போது விவசாயிகள் பலரும் தோட்டத்தில் கத்தரி பயிரிட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் பனி காரணமாக கத்தரிக்காயில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில்: சாக்கோட்டை பகுதி கத்தரிக்காய்க்கு தனி மவுசு உண்டு. விளாரிக்காடு அருகே குளத்துவேலிப்பட்டியில் 2 ஏக்கரில் கத்தரி பயிரிட்டுள்ளோம். தற்போது காய்க்க தொடங்கியுள்ள நிலையில், பறிக்கப்படும் காய்களில் பாதிக்கு மேல் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மருந்து வாங்கி தெளித்தும் எந்த பயனும் இல்லை. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பூச்சி காய்களை கால்நடைகளுக்கு வாங்கி செல்கின்றனர். பூச்சி தாக்குதலால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.