| ADDED : மே 21, 2024 07:10 AM
சிவகங்கை : காரைக்குடியில் பலத்த மழையால் ஒட்டு எண்ணும் மையத்தில் பொருத்திய 'சிசிடிவி' கேமராக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஓட்டு எண்ணுவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகளும், வேட்பாளர்களும் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 1,857 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 'ஸ்ட்ராங்க்' அறையில் வைத்து துணை ராணுவ படை, போலீஸ் என சுழற்சி முறையில் 300 போலீஸ் வரை நியமித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 'சிசிடிவி' கேமராக்கள் கண்காணிப்பு
ஓட்டு எண்ணிக்கை நடக்க இன்னும் 14 நாட்களே உள்ளது. ஓட்டு எண்ணும் மைய 'ஸ்ட்ராங்க் ரூம்' மற்றும் கல்லுாரி வளாகம் முழுவதும் 224 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்குடியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓட்டு எண்ணும் மையம் உள்ள அழகப்பா அரசு இன்ஜி., அரசு பாலிடெக்னிக் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தியுள்ள பெரும்பாலான 'சிசிடிவி' கேமராக்கள் மீது மழை நீர் விழாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் நேற்று தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.