| ADDED : மார் 28, 2024 11:20 PM
கீழடி : கீழடி விலக்கில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செட்டிநாட்டு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்தும் பண்டைய தமிழர் நாகரீகம் பற்றி கண்டறிய பலரும் வந்து செல்கின்றனர். மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கில் இறங்கி இரண்டு கி.மீ., நடந்து சென்று அருங்காட்சியகத்தை காண வேண்டும், மீண்டும் பஸ் ஏற கீழடி விலக்கு வர வேண்டும், சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மழையிலும் வெயிலிலும் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.எம்.எல்.ஏ., தமிழரசியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்ச ரூபாய் செலவில் கீழடி அகழாய்வை பிரதிபலிக்கும் வண்ணம் செட்டி நாட்டு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப்பினுள் சுடுமண் பானைகளும், உறைகிணறுகளும் புடைப்பு சிற்பமாக வரையப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. விரைவில் பஸ் ஸ்டாப் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
பார்வையாளர் நேரம் அதிகரிக்க வாய்ப்பு
கீழடி அருங்காட்சியகம் தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும், வாரம்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதை அடுத்து தொல்லியல் துறையினர் அருங்காட்சியக பார்வையாளர் நேரத்தையும் அதிகரிக்க உள்ளனர். இதன்படி காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது.முதல் கட்டமாக அருங்காட்சியக ஊழியர்களை காலை 8:30 மணிக்கே பணிக்கு வர தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இரவு 8:00 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறையினர் முயற்சி செய்துள்ளனர்.அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.