உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் பிரச்னை மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க கோரிக்கை

திருப்புவனத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் பிரச்னை மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க கோரிக்கை

திருப்புவனம், : திருப்புவனத்தில் சிவகங்கை ரோட்டில் புதியதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமைய உள்ள இடம் குறித்த பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். திருப்புவனம் வழியாக மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்புவனத்தில் செயல்படும் அரசு போக்குவரத்து கிளை பணிமனை சார்பாக சுற்று வட்டார கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஓன்றுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் திருப்புவனம் வழியாக சென்று வருகிறது. எனினும் இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.பல ஆண்டுகளாக போராடிய நிலையில் சிவகங்கை ரோட்டில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்புவனம் பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் இடம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை ரோட்டில் உள்ள காலியிடம் யாருக்கு சொந்தமானது என்பதில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து அதில் அரசு சார்பில் யாரும் ஆஜராகாததால் மற்றொரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.வழக்கறிஞர் ராஜா கூறியதாவது: சிவகங்கை ரோட்டில் உள்ள இந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என ஆரம்பம் முதலே போராடி வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த இடம் தொடர்பான பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியது சரியல்ல. அனைத்து கட்சியினரையும் அழைத்திருக்க வேண்டும். இங்கு அரசு சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு அதில் 50 சதவீத கடைகளின் வாடகையை அந்த இடத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தவர் வசூலித்து கொள்ளலாம். கடைகளை மேல்தளத்திலும் விரிவு படுத்தி கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.தி.மு.க.,வினர் கூறியதாவது: திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இன்றி பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அமைக்க இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை. தி.மு.க., ஆட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. கலெக்டர், அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த பின் அதுகுறித்த விவாதம் எதற்கு என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை