சிவகங்கை : சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய, பயண, உணவுப்படி, கூடுதல் பணி நாள் (இ.டி.ஆர்.,) சம்பளம் பல மாதங்களாக வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.மாவட்ட அளவில் போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளில் கிரேடு 2 போலீசார் முதல் தலைமை காவலர் வரை பணிபுரிகின்றனர். இவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் திருவிழா, பிற பொது நிகழ்ச்சி பாதுகாப்பு பணி, அரசு விழா, பிற மாவட்டங்களுக்கு வி.ஐ.பி.,க்கள் வருகை பாதுகாப்பிற்காக சென்று வருகின்றனர். இவர்களுக்கென உணவு, பயணப்படி, விடுமுறை நாட்களில் பணிபுரிவதற்கான கூடுதல் பணி நாள் (இ.டி.ஆர்.,) சம்பளத்தை அரசு அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மூலம் வழங்கி வருகிறது.ஏற்கனவே, எம்.பி., தேர்தலுக்காக ஏப்., 19 முதல் ஜூன் 4 வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படியை போலீசார் எதிர்பார்த்திருந்த நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து பின்னர் வழங்கப்படும் என தெரிவித்ததால், போலீசார் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். பயணம், உணவு படி இழுபறி
இந்த நிலையில் வழக்கமாக ஒவ்வொரு போலீசாருக்கும் பயணம், உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளமாக மாதந்தோறும் கிடைக்க வேண்டிய ரூ.2000 முதல் 2,500 வரையிலான நிதி கிடைக்காமல் போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.திருச்சி உட்பட பல்வேறு மாவட்ட போலீசாருக்கு தேர்தலுக்கு பின் மாதந்தோறும் உணவு, பயண படி, கூடுதல் பணி நாள் சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு மட்டும், பல மாதங்களாக இவற்றை வழங்கவில்லை. சிவகங்கை எஸ்.பி., காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய மாதாந்திர உணவு, பயண படியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.