| ADDED : மார் 25, 2024 07:20 AM
சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், வேம்பனி கிராமத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் சப்ளை இன்றி, குடிநீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த ஒன்றியத்தில் பள்ளித்தம்பம் ஊராட்சியின் கீழ் வேம்பனி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 120 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். திருச்சி - ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் சென்றபோது, வேம்பனி கிராம மக்களுக்கு பொது குழாயில் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். தற்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்காக பள்ளித்தம்பம் ஆர்ச்சில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியால் வேம்பனி கிராமத்திற்கு செல்லும் காவிரி குடிநீர் தடை பட்டது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் கிடைக்காமல் ஒரு குடம் குடிநீர் ரூ.20 முதல் 30 வரை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேம்பனி கிராம மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் பல முறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடை காலம் துவங்கியதால், குடிநீர் தட்டுப்பாட்டில் வேம்பனி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.பள்ளிதம்பம் ஊராட்சி தலைவர் சண்முக பிரியா கூறியதாவது: வேம்பனி கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக ஒரே இடத்தில் 5 குழாய்கள் பொருத்தியுள்ளோம். கடந்த 8 மாதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குழாய் பொருத்துவதற்கான பணியால், குடிநீர் வினியோகம் இன்றி வேம்பனி மக்கள் தவிக்கின்றனர். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்துவிட்டோம்.