| ADDED : ஜூலை 11, 2024 05:07 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆதார் மையத்தில் தினசரி பள்ளி மாணவ, மாணவியர் பலரும் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியுள்ளதாக புலம்புகின்றனர்.ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவில் சரியான தகவலை பலரும் பதிவு செய்வதில்லை. இதனால் அரசு திட்டங்கள், நிதி உதவி, உதவி தொகை ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. ஆதார் அட்டையில் தினசரி திருத்தம் மேற்கொள்ள பலரும் மையங்களுக்கு செல்கின்றனர்.திருப்புவனத்தில் தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம், தமிழ்நாடு கிராம வங்கி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே ஆதார் திருத்தங்கள் செய்து கொள்ளலாம், தினசரி அதிகபட்சமாக 30 பேருக்கு மட்டுமே ஆதார் திருத்தங்கள் செய்து கொள்ள முடிகிறது. புதிதாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது, ஆனால் திருத்தங்களுக்கு நுாறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஒன்றரை வயது குழந்தை முதல் ஆதார் கட்டாயம் என்பதால் தினசரி பலரும் ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்ய சென்றால் மக்களை வேறு இடத்தில் சென்று பதிவு செய்யுமாறு அலைக்கழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்புவனத்தில் இந்த மூன்று இடங்களை தவிர்த்து ஆதாரில் மாற்றம் செய்ய மதுரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.தாலுகா அலுவலகத்தில் மக்களை அலைக்கழிப்பது குறித்து தாசில்தார் விஜயகுமார் கூறுகையில் : நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 பேர் வரை ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளலாம், இணையதள சேவை வேகம் குறைவாக இருப்பதால் தான் கால தாமதம் ஆகிறது, என்றனர்.புதிதாக ஆதார் பதிவு செய்யும் போது அனைத்து தகவல்களும் சரிபார்த்து பதிவு செய்யப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் பெயர்களுடன் ஜாதியை சேர்ந்து பதிவு செய்துள்ளனர்,அதனை நீக்கவும் ஆதாரில் அலைபேசி நம்பர், எழுத்து பிழை உள்ளிட்டவற்றை சரி செய்யவும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். திருப்புவனத்தில் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும், அல்லது தாலுகா அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.