| ADDED : மார் 20, 2024 12:13 AM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட இன்று காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.சிவகங்கை லோக்சபா தொகுதியின் கீழ் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளின் கீழ் 7,96,896 ஆண், 8,25,716 பெண், மூன்றாம் பாலினத்தவர் 62 பேர் என 16 லட்சத்து 22 ஆயிரத்து 574 பேர் ஓட்டளிக்க உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதியில் மட்டும் 1,357 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.இத்தொகுதியில் போட்டியிட சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 27 வரை (சனி, ஞாயிறு தவிர்த்து) தினமும் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிப்படி 3 வாகனங்களில் மட்டுமே மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும். குறிப்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வேட்பாளர் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குவதால், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகின்றன.