| ADDED : மார் 17, 2024 11:48 PM
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவையொட்டி விடுமுறை நாளான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். இங்கு மார்ச் 12 ல் கொடியேற்றத்துடன் மாசி பங்குனி திருவிழா தொடங்கியது. நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். மார்ச் 19 ல் கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 20 ல் காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.இக்கோயிலில் பக்தர்கள் தினமும் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிேஷகம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை 3:00 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்படும் பக்தர்கள் முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைகின்றனர்.அங்கு அம்மனுக்கு அபிேஷகம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பழனிக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் ஞானசேகர், செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.