உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகத்தில் வெளிநாட்டு மாணவர்கள்

கீழடி அருங்காட்சியகத்தில் வெளிநாட்டு மாணவர்கள்

கீழடி: கீழடி அருங்காட்சியகம் வந்த இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, பிஜி தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அகழாய்வு பொருட்கள் குறித்த விபரங்களை பதிவு செய்து கொண்டனர்.தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, வரலாறு, பண்டைய கால வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளிட்டவைகளை வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை கலெக்டர் செண்பகவல்லி, மண்டபம் கேம்ப் தனி துணை கலெக்டர் கருப்பையா, கண்காணிப்பாளர் கனிமொழி தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 26 பேர், கனடாவைச் சேர்ந்த 8 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 பேர், பிஜி தீவைச் சேர்ந்த ஒன்பது பேர் கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்த குறும்படத்தையும் கண்டு ரசித்தனர். கீழடி அருங்காட்சியகத்தில் தந்த பகடை, சுடுமண் அடுப்பு, வரிவடிவ எழுத்துகள், தங்க அணிகலன், விளையாட்டு காய்கள் உள்ளிட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ் அவர்களுக்கு விளக்கமளித்தார்.இலங்கை கல்லுாரி மாணவி ராஜமணி கீர்த்திகா கூறுகையில்: பண்டைய காலப் பொருட்களை காணும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை இதுபோன்ற பொருட்களை கண்டதில்லை. பாடசாலைகளில் பண்டைய கால பொருட்கள் குறித்து கற்று கொள்ளும் போது அவற்றை நேரில் பார்ப்போம் என நினைத்ததே இல்லை.முதல் முறையாக இவற்றை கண்டு ரசித்துள்ளேன். அதிலும் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய கலை நயம் மிக்க நேர்த்தியான மண்பாண்ட பொருட்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன,என்றார். தனி ஆட்சியர் செண்பகவல்லி கூறுகையில் : நமது நாட்டின் கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை பல்வேறு நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இதுபோன்ற சுற்றுலாக்கள் நடத்தப்படுகின்றன, என்றார்.நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணம் சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளிநாட்டு மாணவ, மாணவிகளுக்கு நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை