சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோயில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை (ஜன.,19) நடக்கும் மஞ்சுவிரட்டில் 100க்கும் மேற்பட்ட காளை, வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.கண்டுபட்டியில் உள்ள பழைய அந்தோணியார் கோவில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை காலை அனைத்து தரப்பு மக்களும் பழைய அந்தோணியார் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடுவர். அதனை தொடர்ந்து புதிய அந்தோணியார் கோவில் முன்பாகவும் பொங்கல் வைத்து வழிபடுவர். பழைய அந்தோணியார் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்துவர். இது தவிர குழந்தை வரம் வேண்டி நேர்த்தி வைத்தோர், நிறைவேறியதும் நன்றி செலுத்தும் விதமாக பிறந்த குழந்தையை கரும்பு தொட்டிலில் ஆலயத்தை சுற்றி வருவர். இது தவிர பிற வேண்டுதலுக்காகவும் ஆலயத்தை வலம் வருவர். கண்டுபட்டியில்மஞ்சுவிரட்டு
கிராம அம்பலம் உட்பட கிராமத்தார்கள் பழைய அந்தோணியார் கோவிலில் இருந்து மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவர். மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து முதலில் கோயில் காளையும், அதை தொடர்ந்து பிற காளைகள் அவிழ்க்கப்படும். இந்த மஞ்சுவிரட்டில் 100 க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர மஞ்சுவிரட்டு திடலுக்கு வெளியே பொட்டலில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்படும். கண்டுபட்டி பொங்கல் விழா மஞ்சுவிரட்டை காண சிவகங்கை மட்டுமின்றி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் வருகை தருவர். வீடுகளில்சைவ உணவு விருந்து
அவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொருட்டு, கண்டுபட்டியில் உள்ள அனைவரது வீட்டிலும் காலை 11:00 மணிக்கே சாம்பார், ரசம், பாயாசத்துடன் மதிய உணவு (சைவம் மட்டுமே) தயாராகி விடும். விழாவிற்கு வந்த அனைவரையும் கண்டுபட்டி மக்கள் மனதார வரவேற்று, மதிய உணவு வழங்கி உபசரிப்பார்கள். கால்நடை துறையினர் காளைகளை பரிசோதனை செய்வார்கள். பொதுப்பணித்துறையினர் மஞ்சுவிரட்டு பொட்டலை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவர். சிவகங்கை எஸ்.பி., பி.கே., அர்விந்த் தலைமையில் டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் உட்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.