உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடி அரசு விழாவில் மாறி மாறி பெருமை

 காரைக்குடி அரசு விழாவில் மாறி மாறி பெருமை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் சைக்கிள்கள் வழங்குவது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை; வாங்குவது பள்ளி கல்வித்துறை என அமைச்சர்கள் மாறி மாறி பெருமை பேசிய நிலையில் அவர்களுக்கு குட்டு வைப்பது போல் கொடுப்பது ஸ்டாலின்; வாங்குவது மாணவர்கள் என துணை முதல்வர் உதயநிதி பேசினார். அவர் மேலும் பேசியதாவது : சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசும் போது, சைக்கிள்கள் கொடுப்பது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. வாங்குவது பள்ளிக்கல்வித்துறை என தெரிவித்தார். அதில் சிறு திருத்தம். கொடுப்பது முதல்வர் ஸ்டாலின். வாங்குவது பள்ளி மாணவர்கள். சைக்கிள்கள் பெறுவதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். 57 ஆயிரம் மாணவிகள் சைக்கிள்களை பெறுகின்றனர். பெண் குழந்தைகள் அதிகம் படிப்பதற்கான அடையாளம் இது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது திராவிட கழகம். நுாறு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இந்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். கல்வி என்பது பவர்புலானது. குட்டியாக இருக்கும் யானையை சிறு கயிற்றில் கட்டி வைப்பார்கள். அதனை அறுக்க முடியாமல் அது நிற்கும். பெரிதாக வளர்ந்த போதும் அதனை அறுக்க முடியாது என்ற நினைப்பில் கயிறை அறுக்க முயற்சி செய்யாமல் அப்படியே நிற்கும். நம் மனித மூளையும் அதே போல தான். நம்மால் இதை செய்ய முடியாது என நினைக்கக் கூடாது. முயற்சி செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படித்து கல்லுாரியில் சென்று படித்தால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விரைவில் கல்லுாரி மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பாடம் நடத்தாதீர்கள். முடிந்தால் உங்கள் வகுப்பை கடன் கொடுத்து மாணவர்களை அதிகம் விளையாட்டில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். படிப்பை போல் மாணவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ