| ADDED : டிச 03, 2025 06:01 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் கவுன்சில் கூட்டம் நடத்தாமல் கையெழுத்து மட்டும் பெறப்படுவதாக கூறி தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை நகராட்சியில் நேற்று நகராட்சி கவுன்சில் கூட்டம் காலை 11:00 மணிக்கு நடத்தப்படுவதாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரும் 11:00 மணிக்கு நகராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெறும் அறைக்கு வந்தனர். அறை திறக்கப்படாமல் இருந்ததால் அறை முன் காத்திருந்தனர். தி.மு.க.வைச் சேர்ந்த சேர்மன் துரை ஆனந்த் அறையில் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்ததால் கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கமிஷனர் அசோக்குமார் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தனலெட்சுமி பதவி ஏற்பதால் அவரால் முதல் தளத்திற்கு ஏறி வர முடியாது என்பதால் சேர்மன் அறையில் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தார். பின்னர் கவுன்சிலர்கள் கீழே இறங்கி வந்து கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு சேர்மன் துரைஆனந்த் தலைமை வகித்தார். முதலில் நடந்த சாதாரண கூட்டத்தில் 22 பொருள்களும், பின்னர் நடந்த அவசர கூட்டத்தில் 16 பணிகளுக்கும் அனுமதி பெறப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜா கூறுகையில், இதுவரை நடந்த 6 கூட்டமும் முறையாக கூட்ட அரங்கில் நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு முறை கூட்டம் நடத்தாததால் கவுன்சில் கூட்ட நோட்டில் கையெழுத்திடாமல் சென்றேன். நடந்து முடிந்த 5 கூட்டங்களுக்கும் கூட்டம் நடத்தப்படாமல் கையெழுத்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. கூட்டத்தை முறையாக நடத்தாததால் நகரின் வளர்ச்சி பணிக்கான குறைகளை பேச முடியவில்லை. அடுத்த முறையாவது முறையாக கூட்டம் நடத்தி மக்களின் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்றதால் இந்த முறை கூட்டத்தை சேர்மன் அறையில் நடத்த அனுமதித்தோம். அடுத்தமுறை கூட்டம் முறையாக நடத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். காங்., கவுன்சிலர் மகேஷ்குமார் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்தாமல் கையெழுத்து மட்டும் வாங்குகிறார்கள். வார்டில் மழைநீர் வடிகால் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லை. கவுன்சில் கூட்டத்தில் பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம் என்றால் அதற்கு கூட்டமே நடக்கவில்லை. புதிதாக வந்த கமிஷனருக்கு கவுன்சிலர் யார் என்றே தெரியவில்லை. அ.ம.மு.க., கவுன்சிலர் அண்புமணி கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் முழுவதும்ஆக்கிரமிப்பாக உள்ளது. காளையார்கோவில், மானாமதுரை பஸ்கள் நிற்கும் முகப்பு பகுதியில் ஆர்ச் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த இடம் முழுவதும் பெட்டிகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் விரிவாக்க பணி நடந்து முடிந்த பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு கவுன்சிலர்கள் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் 18 கடைகள் கட்டி நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. தினசரி சந்தையும் ஏலம் விட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இது குறித்து கவுன்சில் கூட்டத்தில் பேசலாம் என்றால் கூட்டம் நடந்தால் தானே பேச முடியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கையெழுத்தை மட்டுமே வாங்குகிறார்கள் என்றார். கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தனலெட்சுமி பதவி ஏற்பதால் கூட்டம் தரைதளத்தில் உள்ள அறையில் நடத்தப்பட்டது. நகராட்சி அலுவலகத்திற்கு லிப்ட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த முறை கூட்டம் முறைப்படி கூட்ட அறையில் நடத்தப்படும் என்றார்.