உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கையில் கரும்பு விளைச்சல் அமோகம்: ரேஷன் கடைக்கு வழங்க விவசாயிகள் பதிவு

 சிவகங்கையில் கரும்பு விளைச்சல் அமோகம்: ரேஷன் கடைக்கு வழங்க விவசாயிகள் பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பொங்கலுக்கு கரும்பு விளைச்சல் அதிகரித்ததால், ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் தர விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் பொங்கலுக்கு தேவையான கரும்பு சிவகங்கை ஒன்றிய அளவில் தான் விளைவிக்கப்படுகின்றன. குறிப்பாக சிவகங்கை அருகே சாலுார், கீழசாலுார், பெருமாள்பட்டி, கொளிஞ்சிபட்டி, மதகுபட்டி அருகே ஆலம்பட்டி, சிலந்தனிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கரும்பு கட்டைகளை நடவு செய்து, தொடர்ந்து அவற்றிற்கு உரமிட்டும், மருந்து தெளித்தல், மண் அணைத்தல், களையெடுப்பு என பல்வேறு பணிகளை செய்து, டிசம்பரில் இருந்து தை பொங்கலுக்காக அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். தற்போது நடவு செய்து நன்கு விளைந்துள்ள கரும்பு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இக்கரும்பு மும்பை, சென்னை, பெங்களூரு, துாத்துக்குடி, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளன. உரம் விலை உயர்வால் சிரமம் சாலுார் கரும்பு விவசாயி ஆர்.முருகன் கூறியதாவது: கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை வரை ஒரு ஆண்டிற்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவிடுகிறோம். தற்போது உரம் விலை உயர்வால் கரும்புக்கு உரமிடுவதில் நெருக்கடியால் தவிக்கிறோம். 300 கரும்பு வெட்டி எடுக்க வெட்டு கூலியாக நபருக்கு ரூ.1,500 முதல் 2000 வரை வழங்குகிறோம். ஓரளவிற்கு இந்த ஆண்டு நல்ல விலைக்கு கரும்பு விற்றால் மட்டுமே, விவசாயிகள் தப்பிக்க முடியும். அதே போன்று ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்குவதற்காக, தற்போதே தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளோம். 6 அடி உயரத்திற்கு மேல் உள்ள ஒரு கரும்புக்கு ரூ.33 கடந்த ஆண்டு வழங்கினர். இந்த ஆண்டும் அனைத்து விவசாயிகளிடம் விளைந்த கரும்பினை வாங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை