உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருபுவனம் வட்டார நீர்நிலைகளில் விவசாயிகள் தவிப்பு; நொறுங்கி கிடக்கும் பாட்டில் சிதறல்கள்

திருபுவனம் வட்டார நீர்நிலைகளில் விவசாயிகள் தவிப்பு; நொறுங்கி கிடக்கும் பாட்டில் சிதறல்கள்

திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை, வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். மழவராயனேந்தல், துாதை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், கொந்தகை, கட்டமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களில் நாற்று பறிக்க, நடவு செய்ய, களை எடுக்க, வரப்பு வெட்ட, மருந்து தெளிக்க விவசாய கூலி தொழிலாளர்களை நம்பியே உள்ளனர். காலை ஏழு மணிக்கு விவசாய பணிகள் தொடங்கினால் மதியம் இரண்டு மணி வரை வயலில் தான் இருப்பார்கள். 4 முதல் 5 மணி நேரம் ஈர நிலத்திலேயே இருப்பதால் கால்கள் ஊறிப் போய்விடும். அப்படியே கண்மாய், வாய்க்கால் உள்ளிட்டவற்றிற்கு சுத்தம் செய்ய செல்வது வழக்கம். வரப்பு, கண்மாய் கரை, வாய்க்கால் கரைகளில் குடிமகன்கள் போதையில் மது பாட்டில்களை பாதையில் போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் கால்களில் வெட்டு காயம் ஏற்பட்டு விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் பாட்டில் சிதறல்களால் காயம் ஏற்படுவதால் கூலி தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். திருப்புவனத்தில் துாதை கண்மாய், திருப்பாச்சேத்தி கண்மாய், கலியாந்துார் செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் குடிமகன்களின் தொல்லை எல்லை மீறி போகிறது. விவசாயிகள் ஆங்காங்கே குடிமகன்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் பலகைகள் அமைத்தும் பாட்டில்களை உடைப்பது அதிகரித்து வருகிறது. திருப்புவனம் தாலுகாவில் பார் வசதி கிடையாது. குடி மகன்கள் கண்மாய் கரை, வாய்க்கால்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். விவசாயிகள் கூறுகையில்: விடிய விடிய கண்மாய் கரைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி விட்டு போதையில் பாட்டில்களை உடைப்பது தொடர்கதையாக உள்ளது. போலீசில் புகார் செய்தாலும் குடிமகன்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏற்கனவே பன்றிகளால் விவசாயம் குறைந்து வரும் நிலையில் குடிமகன்களாலும் விவசாய பணிகள் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் விவசாயம் செய்யவே அச்சமாக உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை