| ADDED : பிப் 15, 2024 05:13 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகனங்கள் ஆயுள் காலம் முடிந்தும் தொடர்ந்து இயக்க வேண்டிய நிலை தொடர்வதால் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காரைக்குடி, திருப்புத்துார், சிங்கம்புணரி, உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகங்களில் ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி) மற்றும் அதிகாரிகள் அலுவலக பயன்பாட்டிற்காக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.தற்போது அவற்றின் ஆயுள் காலம் முடிந்து 2 வருடங்கள் ஆன நிலையிலும் தற்போது வரை அந்த ஜீப்பை அதிகாரிகள் பயன்படுத்தி வருவதால் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.டிரைவர்கள் சிலர் கூறுகையில், பெரும்பாலான ஜீப்கள் ஆயுள் காலம் முடிந்த சான்றிதழ் வாங்கிய பிறகும் புதிய ஜீப் வழங்கப்படாததால் அதிகாரிகள் இந்த வாகனத்தில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் கூட காப்பீடு தொகை கூட வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் காலாவதியான ஜீப்களுக்கு பதிலாக புதிய வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய ஜீப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றனர்.