உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வேலை உறுதி திட்ட நிதி நிலுவை ரூ.1200 கோடி விடுவிக்கப்படுமா; டிச.12 ல் டில்லியில் போராட முடிவு

 வேலை உறுதி திட்ட நிதி நிலுவை ரூ.1200 கோடி விடுவிக்கப்படுமா; டிச.12 ல் டில்லியில் போராட முடிவு

சிவகங்கை: வேலை உறுதி திட்டத்திற்கான கடந்தாண்டு ரூ.1,200 கோடி நிலுவை தொகையை விடுவிக்க கோரி டிச., 12 டில்லி ஜந்தர்மந்தரில் தர்ணா, பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வழங்கும் பொருட்டு பணிகளை ஒதுக்கி வருகிறது. இதற்கான நிதி ஆண்டு தோறும் மத்திய அரசால் விடுவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு கடந்தாண்டு (2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை) மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.1,200 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி டிச., 12 டில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டமும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டமும் நடத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சிவகங்கையில் சங்க மாநில துணை தலைவர் எம்.செல்வக்குமார் கூறியதாவது: தமிழகத்திற்கு மட்டுமே நிலுவை ரூ.1,200 கோடி விடுவிக்க வேண்டும். இதுபோக 20 கோடி மனித சக்தி நாட்களை குறைத்து, அதற்குரிய சம்பள நிதியான ரூ.674 கோடியை குறைத்து விட்டனர். சட்டத்தில் குறைந்தது 100 நாட்கள் வேலை தர வேண்டும். ஆனால் அதற்கு குறைவான நாட்களே வேலை தருகின்றனர். இந்நிதி ஒதுக்கீட்டில் 6 சதவீதம் நிர்வாக செலவிற்கானது. இந்நிதியில் இருந்து வேலை உறுதி திட்ட பணிகளுக்காக பணிபுரியும் இணை இயக்குனர், துணை பி.டி.ஓ., பொறியாளர், உதவி பொறியாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் என 4 ஆயிரம் பேருக்கான சம்பளத்தை விடுவிக்க முடியவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. ஊழியர்களிடம் பங்களிப்பு ஓய்வூதியத்தொகை 10 சதவீதம், அரசின் பங்களிப்பு தொகை 10 சதவீதத்தையும் பிடிக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக இத்திட்டத்திற்கு நிதியை ஒதுக்குகின்றனர். ஆனால் தமிழகத்திற்கான நிதியை குறைத்து விட்டனர். இதை கண்டித்து தான் டில்லியில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி