| ADDED : ஜூலை 02, 2024 09:23 PM
குற்றாலம்:குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிதமாக விழுந்தது. அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தொடர் சாரல் மழையால், சீசன் களைகட்டி வருகிறது. நேற்று முன்தினம் காலை முதலே அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மெல்லிய சாரலுடன் குளிர்ந்த காற்று வீசியது.குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து நன்றாக இருந்தது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அனைத்து அருவிகளிலும் நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனர்.ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் பரவலாக தண்ணீர் விழுந்தது. குற்றாலம் - ஐந்தருவி செல்லும் வழியில் வெண்ணைமடை குளம் உள்ளது. இந்தக் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குளம் நிரம்பியுள்ளதால், படகு சவாரிக்கு, படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. படகு சவாரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.