| ADDED : ஜூன் 20, 2024 03:00 AM
தேனி:ஓய்வு நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு வழங்கிய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட ஊராட்சிக்கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் (பா.,ஜ.,) நகலை கிழித்தார்.தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பீரித்தா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது.மாவட்ட ஊராட்சி செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் (பா.ஜ.,) பேசுகையில், ஓய்வு நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு வழங்கி உள்ள அறிக்கையில் கள்ளர், ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளிகளின் பெயர் மாற்ற வேண்டும். அதனை பள்ளிகல்வித்துறை கீழ் கொண்டு வரவேண்டும் என உள்ளது. கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க கூடாது. அதே போல் பெரும்பான்மை ஜாதியினர் அதிகமுள்ள பகுதிகளில் அதே சமூகத்தை சேர்ந்தவரை தலைமை ஆசிரியராக நியமிக்க கூடாது என உள்ளது. இது ஜாதி பாகுபாட்டை அதிகரிக்கும். மாணவர்கள் நெற்றில் திலகம், கைகளில் கயிறு கட்டி வரக்கூடாது என்பது ஹிந்து சமய மாணவர்களை குறிவைத்து கூறுவது போல் உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் பல பள்ளிகளில் பூ, பொட்டு வைக்க அனுமதிப்பதில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் இன்றி சிறுபான்மை பள்ளிகளிலும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறி ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கையின் நகலை கிழித்தார்.அறிக்கையை கூட்ட அரங்கிற்குள் கிழிக்க கூடாது என ஊராட்சி செயலாளர் ஆட்சேபனை தெரிவித்தார்.