உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் வசதியின்றி பக்தர்கள் தவிப்பு; கோயில் நகருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்

குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் வசதியின்றி பக்தர்கள் தவிப்பு; கோயில் நகருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்

உத்தமபாளையம் : கோயில் நகரான குச்சனுாரில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிக்குள்ளாகக வருகின்றனர்.தேனி மாவட்டம் குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சுயம்புவாக சனீஸ்வரர் எழுந்தருளியுள்ள தலமாகும். தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று இங்கு கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வருவார்கள். ஆடிப் பெருந் திருவிழாவில் சனீஸ்வரர் நீலாதேவி திருக்கல்யாணம் முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசிக்க திரள்வார்கள். மூன்றாவது சனிக்கிழமை பெருந் திருவிழாவாக கொண்டாடப்படும்.இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோயில் நகருக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாகும். இங்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி, கரையில் உள்ள விநாயகரை தரிசித்து பின் சனீஸ்வரரை தரிசிப்பார்கள். அந்த சுரபி நதி மாசுபட்டுள்ளது. பக்தர்கள் குளித்து விட்டு, நதியில் விட்டுச் செல்லும் உடைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் தண்ணீரில் மிதக்கும். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கரையோரத்தில் மொட்டை போடுவது, காக்கை வாகனம் வாங்கி வைப்பது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றிற்கு போதிய வசதிகள் இல்லை. வெளியூர் பக்தர்கள் அதிகம் வரும் குச்சனுாரில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இங்கு போலீஸ் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டட வசதி செய்தும் இன்னும் புறக்காவல் நிலையம் இங்கு செயல்பட வில்லை.பெண் பக்தர்கள் குளித்து விட்டு உடை மாற்ற அறைகள் இல்லை. நீண்ட தூர ஊர்களில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இயற்கை உபாதைகளை போக்க போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. தரிசனத்திற்கு முன்னும், தரிசனம் முடிந்த பின்னும் பல சிரமங்களை வெளியூர் பக்தர்கள் சந்திக்க வேண்டி உள்ளது. கோயில் வளாகத்திலிருந்து இருந்து சுரபி நதிக்கரையை செல்ல அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது. வருவாயை அனுபவிக்கும் ஹிந்து சமய அறநிலைய துறை அல்லது பேரூராட்சி நிர்வாகம் வசதிகள் செய்து தர முன் வர வேண்டும். எனவே குச்சனூருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெண்களுக்கு உடைமாற்றும் அறை இல்லை

ரமணன், கல்லூரி மாணவர், குச்சனுார்: குச்சனுாருக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி சிரமப்படுகின்றனர். பெண்ளுக்கு கழிப்பறை, குளியலறை இல்லை. சுரபிநதியில் குளித்து விட்டு உடைமாற்ற சிரமம் அடைகின்றனர். பெண்களுக்கு உடை மாற்றும் அறையும் தனியாக கட்ட வேண்டும். சுரபி நதியில் பெண்கள் | ஆண்கள் தனித் தனியாக குளிக்க வசதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக், பாலிதின் பயன்பாட்டை வளாகத்தில் தடை செய்ய வேண்டும். விளக்கேற்றுவதற்கு தனியாக மேடை அமைக்க வேண்டும்.

அசுத்தமான சுரபி நதிக்கரை

ரவி, சமூக ஆர்வலர், சின்னமனுார் : வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் போதிய வசதிகள் இல்லை. பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிடம், பஸ் ஸ்டாண்ட், ஒய்வு அறைகள் அமைத்து தர வேண்டும். குறிப்பாக பத்தர்கள் குளிக்கும் சுரபி நதிக்கரை மிக அசுத்தமாக உள்ளது. போதிய துப்புரவு பணியாளர்கள் நியமித்து தினமும் நதிக்கரை சுத்தம் செய்ய வேண்டும், குச்சனுாக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு அரசிடம் இருந்து பெற்று வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை