| ADDED : மே 19, 2024 06:35 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு மற்றும் மஞ்சளாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர்த்தேக்க முடியும். பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை நீர் மட்டம் நேற்று முன்தினம் 44.30 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 1.70 அடி உயர்ந்து 46 அடியாக உயர்ந்ததள்ளது.சோத்துப்பாறை அணை: பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி,அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம் 126. 28 அடிநேற்று முன்தினம் அணையில் 115.12 அடியாக இருந்தது. நேற்று அணைப்பகுதியில் 23 மி.மீ., மழை பெய்ததால் வினாடிக்கு 100 கன அடி நீர்வரத்து உள்ளது. ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 120.37 அடியாக உயர்ந்துள்ளது. அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.-