போடி, : போடி நகராட்சி 33 வது வார்டு ஆதிசங்கரர் சந்து தெருவில் பாதாள சாக்கடை முறையாக அமைக்காததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குவதால் குடியிருப்போர் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி நகராட்சி 33 வது வார்டில் ஆதிசங்கரர் தெரு, செந்தி விநாயகர் தெரு, பஜார் தெரு, மடம் தெரு, பெரியார் தெரு, சொக்கன் சந்து, சாமியார் தெரு, முத்துவேல் சந்து உட்பட 14 க்கும் மேற்பட்ட தெருக்களில் 900 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் ரோடு, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆதிசங்கரர் சந்து குடியிருப்போர் நிர்வாகிகள் திருப்பதி, சிவலிங்கம், சுகுமார், ராஜா, சிவமுருகன் கூறியதாவது : இருளில் மூழ்கிய தெரு
ஆதிசங்கரர் சந்தில் பாதாள சாக்கடைக்கான குழாய் முறையாக அமைக்காததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. மின் விளக்குகள் இல்லாமல் தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளன. அங்கன்வாடி மையம் சுகாதாரமற்ற நிலையில் முட்புதர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் இப்பகுதியை குடிப்பிரியர்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. அருகே பூங்காவிற்கான இடத்தில் பூங்கா அமைக்காததால் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரவில் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சிறுகுளம் போல தேங்கியுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யததால் சிரமம் அடைந்து வருகின்றனர். சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் வசதி அமைத்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் ரோடு பணி
மடம் தெருவில் இருந்து செந்தி விநாயகர் தெரு வரை ரோடு அமைக்க ஜல்லி கற்கள் மேவி பல நாட்களாகியும் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளன. இதனால் மக்கள் நடந்தும், டூவீலரில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இத் தெருவில் பாதாள சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது. செந்தி விநாயகர் தெருவில் குப்பை சேகரிக்கவும், சாக்கடை தூர்வார போதிய துாய்மை பணியாளர்கள் வருவது இல்லை. இதனால் மக்கள் நீண்ட துாரம் சென்று குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் அகற்ற படாமல் உள்ளதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மடம் தெரு - செந்தி விநாயகர் தெரு மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக மின் கம்பங்கள் அமைந்து உள்ளது. கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியை விரைந்து முடிக்க போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் அடைந்த தரைப்பாலம்
பெரியார் தெருவில் சாக்கடை தரைப் பாலம் சேதம் அடைந்து ஓராண்டிற்கு மேலாகியும் சீரமைக்காமல் கிடப்பில் உள்ளன. சாக்கடை வசதி இருந்தும் தூர்வாராததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்கு முன்பு தேங்கி உள்ளதால் சுகாதாரகேடு ஏற்படுகின்றன. சாக்கடை தரைப்பாலம் அமைத்திட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.