| ADDED : ஜூன் 30, 2024 04:52 AM
கம்பம் : மயக்கவியல் டாக்டர்கள் பற்றாக்குறையால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருத்தடை ஆப்பரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தேனி மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் கடந்தாண்டு நடந்த சிறப்பு முகாமில் ஆண்களுக்கான கருத்தடை ஆப்பரேஷன் செய்தனர். இதனால் டாடா மெமோரியல் பவுண்டேசன் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினர். ஆனால் இந்தாண்டு இதுவரை சிறப்பு முகாம்கள் நடத்தவில்லை. விரைவில் பல்துறைகளை இணைத்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்ய குடும்ப நலத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர்,போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி , கடமலை மயிலை ஆகிய எட்டு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் கருத்தடை ஆப்பரேஷன்கள் நடைபெறுகிறது. இந்த எட்டு ஆப்பரேஷன் தியேட்டர்களுக்கும் ஒரு மயக்கவியல் டாக்டர் மட்டுமே உள்ளார் . எனவே என்.எஸ்.வி .. மற்றும் வாசக்டமி ஆப்பரேஷன்கள் செய்வதில் சிரமம் உள்ளது என்றும், போதிய எண்ணிக்கையில் மயக்கவியல் டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் கூறுகையில், மயக்கவியல் டாக்டர்கள் ஜுலையில் வந்து விடுவார்கள். மாதம் 64 ஆப்பரேஷன்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்து வருகிறது. நிலைமையை சமாளிக்கமருத்துவக் கல்லூரி மற்றும் இணை இயக்குனர்களிடம் மயக்கவியல் டாக்டர்களை அனுப்ப கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.