உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவூற்று வேலப்பர் கோயில் அருகே காயங்களுடன் ஆறு ஆடுகள் பலி சிறுத்தை நடமாட்டமா என அச்சம்

மாவூற்று வேலப்பர் கோயில் அருகே காயங்களுடன் ஆறு ஆடுகள் பலி சிறுத்தை நடமாட்டமா என அச்சம்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோயில் அருகே ஆறு ஆடுகள் கடிபட்ட காயங்களுடன் இறந்து கிடந்தன. சிறுத்தை அவற்றை தாக்கியிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.மாவூற்று வேலப்பர் கோயில் மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். மலைப்பகுதியை ஒட்டிய நிலங்களில் சிலர் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவில் இப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கொட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள் கடிபட்ட காயங்களுடன் இறந்து கிடந்தன. சிறுத்தை கடித்து ஆடுகள் இறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை. சிறுத்தை நடமாட்டத்தை யாரும் பார்க்கவில்லை. ஆடுகளின் கழுத்து, வயிற்றுப்பகுதி கடித்து குதறப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களில் அச்சத்துடன் பணி செய்கின்றனர். இரவில் தோட்டத்தில் தங்குவதையும் தவிர்க்கின்றனர் என்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலப்பர் கோயில் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லை. கடிபட்டு கிடந்த ஆடுகள் பரிசோதனை செய்யப்பட்டன. சிறுத்தை கடித்தற்கான தடயங்கள் இருந்தால் டாக்டர் அறிக்கையில் தெரியவரும். நாய்கள் கடித்தும் ஆடுகள் இறந்திருக்கலாம். சிறுத்தை தான் பிடித்த இரையை கடித்து தூக்கிச் சென்று விடும். செந்நாய்கள் இரையை முழுமையாக தின்று தீர்த்துவிடும். சிறுத்தை உட்பட வனவிலங்குகள் நடமாட்டத்தை கேமரா மூலம் இப்பகுதியில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்