உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் மாணவர்கள்: மேரிமாதா கல்லுாரியில் இயற்கையை நேசிக்க புதிய முயற்சி

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் மாணவர்கள்: மேரிமாதா கல்லுாரியில் இயற்கையை நேசிக்க புதிய முயற்சி

மாவட்டம் முழுவதும் பகலில் வெப்பக்காற்று வீசுகிறது. சைக்கிள், டூவீலரில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் எங்கேயாவது ஒற்றை மரம் நிழலில் நின்று சற்றே இளைப்பாறி செல்கின்றனர். இதன் பின் மனமும், உடலும் புத்துணர்வு பெற்று மீண்டும் பயணத்தை துவங்குகிறோம். சற்று பத்தாண்டுகள் பின்னோக்கி பார்க்கையில் மரக்கன்றுகள் வளர்ப்பதின் அவசியத்தை பலரும் அலட்சியப்படுத்தியதின் விளைவு, தற்போதைய புவிவெப்பமயமாதலை உணர்கிறோம். இனியும் அலட்சியம் காட்டினால் அடுத்த பத்தாண்டில் கோடை காலங்களில் ரோட்டில் செல்வது கூட பாலைவனத்தில் செல்வது போல் உணர வேணடிய நிலை ஏற்படும். இதுபோன்ற அபாயகரமான நிலை உருவாகுவதை தடுக்க, இன்றிலிருந்து மரக்கன்றுகளை அதிகம் நட்டு பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இச் சூழலில் மரங்களை அதிகளவில் வளர்த்து மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது மேரி மாதா கலை அறிவியல் கல்லூரி.பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இக் கல்லூரி வளாகத்தில் 25 அடி உயரத்திற்கு ஒரே இடத்தில் ஆலமரம், அரசமரம், வேப்பமரம்இணைந்துள்ளது வளர்வது அபூர்வமானது. இம் மரங்களின் நிழல் கல்லுாரியை எப்போதும் குளுமையாக வைத்துள்ளது.மரங்களின் பயன்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த மரத்தில் கூடு கட்டி ஆனந்தமாக குரல் எழுப்பும் சிட்டுக்குருவி, குயில்கள் உட்பட ஏராளமான பறவை இனங்களின் ரீங்காரத்தை கல்லூரி வளாகத்தில் கேட்கலாம்.இக்கல்லூரியில் 'நம் பூமியை பசுமையாக்குவோம் இயற்கையை நேசிப்போம்' என்ற அமைப்பின் கீழ் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி, பாரதியார், காமராஜர், அப்துல் கலாம் உட்பட தலைவர்களின் பிறந்தநாள் விழா,சுதந்திர, குடியரசு தினங்களில், உலக சுற்றுச்சூழல் தின விழா, கல்லூரி ஆண்டு விழா, முக்கிய விழாக்களில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களிடமும் மரக்கன்றுகள் வளர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கல்லூரி வரவேற்பு அறையில் 'மணி பிளான்ட்' தாவர வகைகளுக்கு தண்ணீர் ஊற்றியும், மாணவ, மாணவிகள் இயற்கையின் மீதான தங்களது ஈர்ப்பை பதிவு செய்கின்றனர். கல்லூரி வளாகத்தில் ஆலமரம், அரசமரம், வேம்பு, புங்கை, நாவல், அத்தி, மா, புளியமரம், தென்னை உட்பட பல்வேறு மர வகைகள் 20 ஏக்கரில் பசுமையாக வளர்ந்துள்ளது.

கல்வியும், இயற்கை நேசிப்பும் இரு கண்கள்

பி.ஜெ.ஐசக் பூச்சாங்குளம், கல்லுாரி முதல்வர் : கல்லூரியில் என்.எஸ். எஸ்., திட்டம் மூலம் பாலிதீன் ஒழிப்பு, துணிப்பைகளை சுமந்து செல்வோம். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், இயற்கை வளம் காப்போம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மண்வளம் காப்போம், மழை பெறுவோம், என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி மரக்கன்றுகளை பரிசாக வழங்கி வருகிறோம். மாணவ, மாணவியர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சுழற்சி முறையில் பராமரிக்கின்றனர்.

துணிப்பைக்கு வரவேற்பு

பிஜோய் மங்களத்து, நிர்வாக இயக்குனர் : கல்லூரி வளாகத்தில் சிறிதளவும் பாலிதீன் நுழையக்கூடாது என்பதை கண்காணித்து வருகிறோம். என்.எஸ்.எஸ்., முகாமில் பல்வேறு பகுதிகளில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றி வருகிறோம். வெப்பமயமாதல் சூழல் பாதுகாப்பின் அவசியம் மரக்கன்றுகளின் நட்பு பராமரிப்பதோடு ஆண்டுதோறும் கல்லூரி ஏராளமான மரக்கன்றுகள் நட்டு பிருந்தாவனமாக மாற்றி வருகிறோம். கல்லூரி ஆண்டு விழாவில் மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார். பாலிதீனுக்கு தடை விதித்து, துணிபையை வரவேற்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை