| ADDED : ஜூலை 29, 2024 12:32 AM
அனைத்து பள்ளி வளாகங்களிலும் மரங்கள் அடர்ந்து வளர்க்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் இயற்கை சூழல் பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்க உதவுகின்றன. மரங்கன்றுகள் அதிகம் வளர்க்கப் படுவதால் நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. ஆபத்தை தரும் அனைத்து வாயுக்களையும் தனக்குள்ளே இழுத்துக் கொண்டு ஆரோக்கியம் தரும் ஆக்சிஜனை தருகிறது. பணம் பெறாமல் மனிதனின் நுரையீரலை சுத்தம் செய்யும் மருத்துவர் மரம்தான். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த மரங்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடமிருந்து இதை துவக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் இதன் அவசியம் தெரியவரும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இயற்கை சார்ந்த அமைப்புகளும் கடந்த சில நாட்களாக மரக்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேற்குத் தொடர்ச்சி மலைக்கு நடுவில் கூடலுார் நகராட்சி அமைந்துள்ளது. கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கத்தான் செய்கிறது. காரணம் மரங்கள் குறைவு. பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பூமி வெப்பமயமாகிறது. இந்த உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு பூமியில் சீர்கேடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணி நாம் அதிகமாக பயன்படுத்தும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதுதான். இதற்கு தீர்வு காணும் வகையில் மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் பாலிதீன் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி. வாரந்தோறும் மரம் நடும் விழா
பி.எம். அதிபர், தலைமை ஆசிரியர், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி: எமது பள்ளியில் வாரம் ஒரு முறை மரக்கன்றுகள் நடுவிழா நடத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தில் 323 வகையான மரங்கள் உள்ளன. ஆக்சிஜனை அதிகம் தரும் 102 மரங்கள் இந்த ஆண்டு மட்டும் நடப்பட்டுள்ளன. மூலிகை மரங்கள் அதிகம் உள்ளதால் தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு அதிக ஆக்சிஜனும், தூய காற்றும் வளாகத்தில் உள்ள கூடுதல் மரங்களால் கிடைப்பது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. வளாகத்திற்குள் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது., என்றார். சமூக மாற்றத்தை உருவாக்கும்
ஆர்.கார்த்திகேய பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்: மாணவர்களுக்கு தரும் கல்வி எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற பெரிதும் உதவும். இயற்கை பேரழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது பாலிதீன் பைகள். இதை பயன்படுத்தாமல் தடுக்க மீண்டும் வாழை இலைகளை பயன்படுத்தலாம். தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மண்பானை, சில்வர் பாத்திரம் போன்றவற்றை உபயோகிக்கலாம். சந்தைக்குச் செல்லும் போது கூடைகள், துணி பைகள் போன்றவற்றை உபயோகிக்க வலியுறுத்துவது சமூக மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.